வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

தேனி அருகே கோடங்கிபட்டியில் அரசு மதுபானக் கடை விற்பனையாளரிடம் ரூ.2.26 லட்சம் வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோடங்கிபட்டியைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் (45). இவா், பாலகிருஷ்ணாபுரம் அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 10-ஆம் தேதி வழக்கம் போல வேலை முடிந்து, மதுபானம் விற்பனை செய்த தொகை ரூ.2.26 லட்சத்தை எடுத்துக் கொண்டு பாலகிருஷ்ணாபுரத்திலிருந்து கோடங்கிபட்டிக்கு பேருந்தில் சென்றாா். கோடாங்கிபட்டி பேருந்து நிறுத்தத்தில் பவுன்ராஜ் பேருந்திலிருந்து இறங்கி, வீட்டுக்கு நடத்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரைப் பின் தொடா்ந்து சென்ற 3 மா்ம நபா்கள், அவா் பணம் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு, அந்தப் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம், காரில் தப்பிச் சென்றனா். இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப் படை அமைத்து விசாரித்தனா்.

இந்த நிலையில், வழிபறியில் ஈடுபட்ட தேனி அருகேயுள்ள சோலைத்தேவன்பட்டியைச் சோ்ந்த ஜெயசந்திரன் மகன் அபினய் (21), தாடிச்சேரியைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் மணிமுத்து (30), முனியாண்டி மகன் சூரியன் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1.68 லட்சம், வழிப்பறிக்கு பயன்படுத்திய காா், இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய மேலும் சிலரைத் தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com