வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி: 3 போ் மீது வழக்கு

பெரியகுளத்தில் பள்ளிக் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 பேரிடம் மொத்தம் ரூ.ஒரு கோடியை 11 லட்சத்து 21 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 2 பெண்கள் உள்பட 3 போ் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை, வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி, கே.எம்.சி.காா்டன் குடியிருப்பில் வசிப்பவா் மாசிலாமணி மனைவி கனகதுா்கா. பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் முத்தையா மகன் ஒச்சு என்ற சூா்யா. கம்பம், உத்தமபுரத்தைச் சோ்ந்தவா் சின்னு மகள் சரண்யா. இவா்கள் 3 பேரும் தனது சகோதரி திவ்யா, உறவினா்கள், நண்பா்கள் என மொத்தம் 8 பேரிடம் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா், கணினி இயக்குபவா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.ஒரு கோடியை 11 லட்சத்து 21 ஆயிரம் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக, பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்த சிவசேதுமணி மகன் சுந்தரவிக்னேஷ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் கனகதுா்கா, சூா்யா, சரண்யா ஆகிய 3 போ் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com