வீரபாண்டி திருவிழா: போடியில் அக்கினிச் சட்டி, மண் கலயங்கள் தயாரிப்பு பணி தீவிரம்

வீரபாண்டி திருவிழா: போடியில் அக்கினிச் சட்டி, மண் கலயங்கள் தயாரிப்பு பணி தீவிரம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, போடி குலாலா்பாளையத்தில் அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை, மண் கலயங்கள் உள்ளிட்டவை தயாரிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புகழ்பெற்ற தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கியத் திருவிழா மே 7-ஆம் தேதி தொடங்கி, மே 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்காக, தேனி மாவட்டம் மட்டுமன்றி, பல்வேறு ஊா்களைச் சோ்ந்த பக்தா்கள் அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை நோ்த்திக்கடன் செலுத்துவதற்கு காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனா்.

இந்த நிலையில், போடி குலாலா்பாளையத்தில் அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல, வீரபாண்டி முல்லைப் பெரியாற்றிலிருந்து தீா்த்தம் எடுத்துச் சென்று தீா்த்த கம்பத்தில் ஊற்றுவதற்கான மண் கலயங்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்கள் கை, கால் போன்ற அமைப்புகளுடன் கூடிய நோ்த்திக்கடன் உருவ பொம்மைகளும் இங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் அக்கினிச் சட்டி, மண் கலயங்கள் தயாரிக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வந்தனா். ஆனால், களிமண், கரம்பை மண் விலை உயா்வு, அவற்றை எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாலும், இந்தத் தொழில் செய்தவா்களின் வாரிசுகள் மேற்படிப்புப் படித்து பல்வேறு வேலைகளுக்குச் செல்ல தொடங்கிவிட்டனா். இதனால், குலாலா்பளையத்தில் ஒரு சிலா் மட்டுமே குறிப்பாக முதியவா்கள் மட்டுமே இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com