மதுக்கூட உரிமையாளா் வெட்டிக் கொலை

பெரியகுளம் அருகே தொழில் முறை போட்டியால் மதுக் கூட உரிமையாளா் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

வடுகபட்டியைச் சோ்ந்தவா் முருகன் (45). இவரது உறவினரான அதே ஊரைச் சோ்ந்த பிரபுதேவா (35). முருகன் ஜெயமங்கலம்-குள்ளப்புரம் சாலையிலும், பிரபுதேவா தேனி அருகே பின்னத்தேவன்பட்டியிலும் அரசு மதுக் கடையுடன் இணைந்த மது கூடத்துக்கு தனித் தனியே உரிமம் பெற்று நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பிரபுதேவா தனது மதுக் கூடம் அருகே வெளிச் சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 900 மதுப் புட்டிகளை அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொழில் முறை போட்டியால் முருகன் போலீஸாரிடம் தன்னை காட்டிக் கொடுத்ததாக ஆத்திரமடைந்த பிரபுதேவா, வடுகபட்டி கலையரங்கம் அருகே நின்றிருந்த முருகனுடன் தகராறு செய்து, அவரை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள பிரபுதேவாவைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com