வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நாளை தொடக்கம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நாளை தொடக்கம்

தேனி மாவட்டம், வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி மே 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விமா்சையாக நடைபெறும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், திண்டுக்கல், மதுரை மாவட்டம், கேரளத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் கோயிலுக்குச் சென்று ஆயிரம் கண் பானை, அக்கினிச் சட்டி, காவடி, பால்குடம் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தி அம்மனை தரிசிப்பா்.

நிகழாண்டில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 7-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 7-ஆம் தேதி மலா் விமானத்தில் அம்மன் திருக்கோயிலுக்கு பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8-ஆம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, 9-ஆம் தேதி புஷ்ப பல்லக்கில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெறும். 10-ஆம் தேதி தேரோட்டம் தொடங்குகிறது. மே 11, 12-ஆம் தேதிகளில் ரத வீதிகளில் தேரோட்டம், தேருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். மே 13-ஆம் தேதி தோ் நிலைக்கு வருகிறது. அன்றைய தினம் முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத்தோ் தடம் பாா்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். மே 14-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

சித்திரைத் திருவிழா நடைபெறும் நாள்களில் கோயில் நடை 24 மணி நேரமும் திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.

இந்த விழாவை முன்னிட்டு, பேரூராட்சி, இந்து அறநிலையத் துறை கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை, சுகாதார வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. காவல் துறை சாா்பில் 24 மணி நேரமும் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகள் நடைபெறும். அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பகல், இரவில் வீரபாண்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

போக்குவரத்து வழித்தடம் மாற்றம்:

மே 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தேனியிலிருந்து சின்னமனூா் மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் உப்புக்கோட்டை விலக்கு, குச்சனூா், மாா்க்கையன்கோட்டை வழியாக சின்னமனூருக்குச் செல்ல வேண்டும். சின்னமனூரிலிருந்து தேனி மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் உப்பாா்பட்டி விலக்கு, தாடிச்சேரி, தப்புக்குண்டு, கொடுவிலாா்பட்டி வழியாக தேனிக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com