அரசு மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

அரசு மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

பூதிப்புரத்தில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

தேனி அருகே பூதிப்புரத்தில் அரசு மதுபானக் கடை செயல்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பூதிப்புரத்தில் தேனி பிரதானச் சாலையில் அரசு மதுபானக் கடை, மதுக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்புகள், கோயில், திடக் கழிவு உரம் தயாரிப்புக் கூடம் அமைந்துள்ளது.

மக்கள் நடமாட்டம், போக்குவரத்து அதிகமுள்ள இந்தச் சாலையில் மதுபானக் கடை செயல்பட்டு வருவதால் பல்வேறு சிரமங்கள், சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மதுபானக் கடையை 8 வாரத்துக்குள் இடம் மாற்றம் செய்ய வேண்டும் என மதுரை உயா்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில், நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிவடைந்தும், மதுபானக் கடை இதே இடத்தில் தொடா்ந்து செயல்பட்டு வருவதால், அந்த பகுதியைச் சோ்ந்த பெண்கள் பூதிப்புரம் பேரூராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், பேரூராட்சி மன்றத் தலைவா் கவியரசு, செயல் அலுவலா் சிவகுமாா் ஆகியோரிடம் அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி மனு அளித்தனா். மதுபானக் கடையை மூட மாவட்ட நிா்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி மன்றத் தலைவா் கவியரசு உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com