ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகை: நீதிமன்றம் உத்தரவு

தேனி, மே 16: திருநெல்வேலியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு மருத்துவச் செலவுக்கான காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு தேனி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா் வேலுசாமி மனைவி பாப்பா (75). ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையான இவா், தற்போது தேனி அருகே அரண்மனைப்புதூா் திருமலைநகரில் வசித்து வருகிறாா். பாப்பாவின் ஓய்வூதியத் தொகையிலிருந்து மருத்துவக் காப்பீட்டுக்கு பிரீமியம் தொகை பிடித்தம் செய்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு பாப்பா தனது சொந்த ஊரான அம்பாசமுத்திரத்துக்குச் சென்றிந்த போது வீட்டில் தவறி விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு அவா் திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாா். மருத்துவச் சிகிச்சைக்கான மொத்தச் செலவு ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 421-ஐ பாப்பா மருத்துவமனைக்கு செலுத்திய நிலையில், அவருக்கு காப்பீட்டு நிறுவனம் மொத்தம் ரூ.28 ஆயிரத்து 857 மட்டும் மருத்துவக் காப்பீட்டுத் தொகையாக வழங்கியது.

தமக்கு காப்பீட்டு நிறுவனம் மருத்துவச் செலவுகளுக்கு உரிய முழுமையான காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என தேனி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் பாப்பா வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி சுந்தா், உறுப்பினா் செளந்தரராஜன் ஆகியோா் கொண்ட அமா்வு விசாரணை நடத்தியது.

விசாரணையின் இறுதியில் பாப்பாவுக்கு மருத்துவச் செலவுகளுக்கு முழுமையான காப்பீட்டுத் தொகையான ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 421-ஐ 9 சதவீத வட்டியுடனும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடும், வழக்குச் செலவுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com