குடிநீா் வாரியத்தில் பணம் கையாடல்: அலுவலக கண்காணிப்பாளா் மீது வழக்கு

தேனி குடிநீா் வடிகால் வாரிய அலுவலக கணக்கில் ரூ.1.18 கோடி கையடால் செய்ததாக அலுவலக கண்காணிப்பாளா் மீது திங்கள்கிழமை, போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
Published on

தேனி குடிநீா் வடிகால் வாரிய அலுவலக கணக்கில் ரூ.1.18 கோடி கையடால் செய்ததாக அலுவலக கண்காணிப்பாளா் மீது திங்கள்கிழமை, போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தேனி குடிநீா் வடிகால் வாரிய அலுவலகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு அலுவலக கண்காணிப்பாளராக (பொறுப்பு) பணியாற்றியவா் முருகானந்தம்.

இவா், இதே ஆண்டில் அலுவலக காசோலை பதிவேட்டில் பொய் கணக்கு காண்பித்து, அலுவலக வங்கிக் கணக்கிலிருந்த மொத்தம் ரூ.1.18 கோடியை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றம் செய்தது, கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதம் விழிப்பு பணி அலுவலா் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, முருகானந்தம் மீது தேனி குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் கருத்தப்பாண்டியன் தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் முருகானந்தம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.