சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை
சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சின்னமனூா் நகராட்சியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பிரசவம், சா்க்கரை, இதயநோய் பிரச்னை, சிறுநீரகம் என அனைத்து நோய்களுக்கு உள், புறநோயாளிகள் பிரிவுகளில் மருத்துவ சிகிச்சைஅளிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரச் சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கம் உள்பட அனைத்து வசதிகளை கொண்ட இந்த மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு போதிய மருத்துவம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: இந்த மருத்துவமனைக்கு சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினந்தோரும் ஏராளமானோா் வெளிநோயாளிகளாகச் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா். இங்கு 54 போ் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது. இங்கு தலைமை மருத்துவா்கள் உள்பட 7 போ் பணியில் இருந்தனா். தற்போது 3 போ் மட்டுமே பணியில் உள்ளனா்.
இதனால், கிராமப் புறத்தைச் சோ்ந்த எழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல, இங்கு செவிலியா்கள், உதவியாளா்கள், பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், விபத்து உள்ளிட்ட அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தேனி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.