வேலைக்கு ஆள் அணுப்பும் முகவரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை
சின்னமனூா் அருகே சீலையம்பட்டியில் வெளி நாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் முகவரைக் கொலை செய்து விட்டு, தற்கொலைக்கு முயன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சிதம்பரம் அருகேயுள்ள சி.கொத்தங்குடியைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் கருணாநிதி (57). இவா், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் முகவராக செயல்பட்டு வந்தாா்.
இவா் மூலம் சீலையம்பட்டியைச் சோ்ந்த அஜ்மல்கான் (40) மனைவி ஆஷாபானு, கடந்த 2018-ஆம் ஆண்டு குவைத்துக்கு வீட்டு வேலைக்குச் சென்றாா்.
ஆஷாபானு அங்கிருந்து மாதந்தோறும் சம்பளப் பணத்தை தனது கணவா் அஜ்மல்கானுக்கு அனுப்பி வந்தாா். சில மாதங்களுக்குப் பிறகு, ஆஷாபானு சம்பளப் பணத்தை அனுப்பாமல் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், ஆஷாபானு அவரை வேலைக்கு அனுப்பி வைத்த கருணாநிதியின் மகன் வினோத்குமாா் (32) என்பவருடன் தொடா்பில் இருப்பதாக அஜ்மல்கான் சந்தேகித்தாா். இந்தப் பிரச்னை தொடா்பாக கடந்த 2019 ஜூன் 15-ஆம் தேதி கருணாநிதியை சிதம்பரத்திலிருந்து சீலையம்பட்டிக்கு வரவழைத்த அஜ்மல்கான், அங்கு அவரை மண்வெட்டிக் கணையால் அடித்துக் கொலை செய்து, தனது தோட்டத்தில் புதைத்தாா்.
பின்னா், 2019 ஜூன் 21-ஆம் தேதி அஜ்மல்கான் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்று, சின்னமனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த அஜ்மல்கானிடம் சின்னமனூா் கிராம நிா்வாக அலுவலா் ஜெயா விசாரணை நடத்தினாா். இதில், அஜ்மல்கான் கருணாநிதியைக் கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. இது குறித்து சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அஜ்மல்கானை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அஜ்மல்கானுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி எஸ்.கோபிநாத் தீா்ப்பளித்தாா்.