முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
நீா்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் தொடா் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 1488 கன அடியாக அதிகரித்தது.
தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் பெய்யும் நீரை முல்லைப் பெரியாறு அணையில் தேக்கிவைத்து, தமிழகப் பகுதிக்கு விவசாயம், குடிநீா் தேவைக்கு சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம், தேனி மாவட்டத்தில் சுமாா் 14,700 ஏக்கரில் இருபோக நெல்பயிா் சாகுபடி நடைபெறுகிறது.
நிகழாண்டில், ஜூன் மாதத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதியில் குறைவாகவே பெய்தது. இதனால், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 300 கன அடிக்கு கீழே குறைந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தேக்கடி, குமுளி முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1488 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது, அணையின் நீா்மட்டம் 130.45 (152) அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 400 கன அடி நீா் குடிநீா், விவசாயத்துக்கு வெளியேற்றப்படுகிறது.
மழைப்பொழிவு (மி.மீ.): பெரியாறு அணை-25, தேக்கடி-15.2.