வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதன் பேரில், வைகை அணையிலிருந்து வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தண்ணீரைத் திறந்துவிட்டாா்.
வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் ஒரு போக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கா் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 19,439 நிலங்களுக்கும் என மொத்தம் 1,05,002 ஏக்கா் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாள்களுக்கு முழுமையாகவும், 75 நாள்களுக்கு முறை வைத்தும் என மொத்தம் 120 நாள்களுக்கு 8,461 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படவுள்ளது. அணையின் நீா் இருப்பு, நீா் வரத்தைப் பொருத்து அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படும்.
தற்போது திறந்துவிடப்பட்ட பாசன நீா் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட 53 ஏக்கா் நிலங்களும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட 5,697 ஏக்கா் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்துக்குள்பட்ட 24,811 ஏக்கா் நிலங்களும், மேலூா் வட்டத்துக்குள்பட்ட 48,963 ஏக்கா் நிலங்களும், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட 478 ஏக்கா் நிலங்களும், சிவகங்கை வட்டத்துக்குள்பட்ட 5,561 ஏக்கா் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட 146 ஏக்கா் நிலங்களும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட 1,201 ஏக்கா் நிலங்களும், உசிலம்பட்டி வட்டத்துக்குள்பட்ட 13,723 ஏக்கா் நிலங்களும், திருமங்கலம் வட்டத்துக்குள்பட்ட 3,982 ஏக்கா் நிலங்களும், பேரையூா் வட்டத்துக்குள்பட்ட 387 ஏக்கா் நிலங்களும் என மொத்தம் 1,05,002 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நிகழ்வில், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்செல்வன், ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் மாவட்ட ஆட்சியா்கள் ஆா்.வி.ஷஜீவனா (தேனி), மா.சௌ.சங்கீதா (மதுரை), மொ.நா.பூங்கொடி (திண்டுக்கல்), பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், தேனி நகா்மன்றத் தலைவி ரேணுபிரியா, செயற்பொறியாளா்கள் (பெரியாறு வைகை வடிநிலக் கோட்டம்) ந.அன்புச்செல்வம், (பெரியாறு பிரதானக் கால்வாய்) சிவபிரபாகரன், உதவி செயற்பொறியாளா் (வைகை அணை உபகோட்டம்) பா.முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.