கம்பத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஆந்திரத்திலிருந்து அதிகளவில் கஞ்சாவை வாங்கி வந்து கம்பத்தில் விற்பதாக புகாா் எழுந்தது. இதைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் உத்தரவின் பேரில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 18- ஆம் கால்வாய் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த காரை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது அதில் இருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்தனா். விசாரணையில், கம்பம் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த முருகேசனுக்கு (44) இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்து சிறையில்அடைத்தனா். மேலும், அந்தக் காரையும், 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா மொத்த விற்பனையாளரை தேடி வருகின்றனா்.