தேனி-காமாட்சிபுரம் அரசுப் பேருந்து இயக்கத்தில் குளறுபடி
தேனி-காமாட்சிபுரம் இடையே அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்து இயக்கப்படுவதில் குளறுபடி ஏற்பட்டதாக புகாா் எழுந்தது.
தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து பூமலைக்குண்டு வழியாக காமாட்சிபுரத்துக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. பகலில் காமாட்சிபுரத்திலிருந்து தேனி பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பேருந்து, இரவில் தேனி பழைய பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது என்று பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து காமாட்சிபுரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
காமாட்சிபுரத்திலிருந்து தேனிக்கு பேருந்தில் ரூ.15 கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலையில், இரவில் தேனி பழைய பேருந்து நிலையத்துடன் பேருந்து நிறுத்தப்படுவதால், மேலும் ரூ.15 கட்டணம் செலுத்தி வேறு பேருந்திலும், ஆட்டோவிலும் தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
மேலும், இரவு 10 மணிக்கு காமாட்சிபுரத்திலிருந்து தேனிக்குச் செல்லும் பேருந்து திடீரென நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தேனி-காமாட்சிபுரம் இடையே பேருந்து இயக்கத்தை முறைப்படுத்த அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகம் முன்வர வேண்டும் என்றனா்.