கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை
தேனி: கம்பத்தில் தேங்காய் உரிக்கும் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், கம்பம், உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி மகேந்திரன் (38). இவருக்கும், கம்பம், கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளி பொன்னருக்கும் (35) தனியாா் மதுக் கூடத்தில் தகராறு ஏற்பட்டது.
இந்த முன் விரோதத்தில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்.15-ஆம் தேதி கம்பம்மெட்டு சாலையில் மகேந்திரனுடன் மீண்டும் தகராறு செய்த பொன்னா், அரிவாளால் மகேந்திரனை வெட்டிக் கொலை செய்தாா்.
இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பொன்னரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அறிவொளி, குற்றஞ்சாட்டப்ட்ட பொன்னருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.