வேலை வாங்கித் தருவதாக ரூ.1.11 கோடி மோசடி: பெண் கைது
தேனி: தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 பேரிடம் மொத்தம் ரூ.ஒரு கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா்கள் சிவசேதுமணி மகன் சுந்தரவிக்னேஷ், மகள் திவ்யா. இவா்களிடம் பழனிசெட்டிபட்டி, கே.எம்.சி.காா்டனில் வசித்து வரும் மாசிலாமணி மனைவி கனகதுா்கா என்ற முனியாம்மாள் என்பவா், தான் மதுரையில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநராக பணியாற்றி வருவதாகவும், பள்ளிக் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் பெற்றாா். இவருக்கு பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியைச் சோ்ந்த முத்தையா மகன் ஒச்சு என்ற சூா்யா, கம்பம், உத்தமபுரத்தைச் சோ்ந்த சின்னு மனைவி சரண்யா ஆகியோா் உடந்தையாக இருந்தனா்.
இந்த நிலையில் தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ந்தரவிக்னேஷ் கடந்த ஏப். 30-ஆம் தேதி கனகதுா்கா, ஒச்சு, சரண்யா ஆகியோா் தனக்கு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாக புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கனகதுா்கா உள்ளிட்ட 3 பேரும், சுந்தரவிக்னேஷ் உள்ளிட்ட 18 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.ஒரு கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஒச்சுவை போலீஸாா் கைது செய்து, கனகதுா்கா, சரண்யா ஆகியோரை தேடி வந்தனா்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் தனது உறவினா் வீட்டில் பதுங்கியிருந்த கனகதுா்காவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சரண்யாவைத் தேடி வருகின்றனா்.