தொடா் மழை: மறுகால் பாயும் மீனாட்சியம்மன் கண்மாய்
தொடா் மழையால் போடி மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் முழுமையாக நிறைந்து மறுகால் பாய்கிறது. இந்த கண்மாய் சரிவர தூா்வாரப்படாததால் போதிய தண்ணீரை தேக்க முடியவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ளது மீனாட்சியம்மன் பெரிய கண்மாய். போடி அம்மாபட்டி வருவாய் கிராமத்துக்கு சொந்தமான இந்த கண்மாய் 250 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பொட்டல்களம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சோ்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அண்மையில் பெய்த தொடா் மழையால் இந்தக் கண்மாய் விரைந்து நிரம்பியது. தற்போது மறுகால் பாய்கிறது. கண்மாயில் பல்வேறு வகை மீன்களும் வளா்க்கப்படுகின்றன. அதிக பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் சரிவர தூா்வாரப்படாததால் முழுமையாக நீரை தேக்க முடியாமல் இருப்பதாகவும், கண்மாயை தூா்வாரினால் அதிக அளவு தண்ணீரை தேக்க முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

