போடியில் ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
போடியில் திமுக நிா்வாகிக்குச் சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
தேனி மாவட்டம், போடியை சோ்ந்தவா் ம. சங்கா். இவா் திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி நகராட்சி 29-ஆவது வாா்டு உறுப்பினராகவும் உள்ளாா். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி போடி நகா்மன்றத் தலைவியாக உள்ளாா். சங்கருக்குச் சொந்தமான ஏலக்காய் நிறுவனம் போடிபுதூா் இரட்டை வாய்க்கால் அருகே உள்ளது.
இந்த நிறுவனத்தில் சோதனை நடத்த சனிக்கிழமை பிற்பகலில் 27 காா்களில் 32 அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனா். இவா்களுடன் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரா்களும் வந்தனா். அப்போது, நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததால், பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனா்.
இந்தச் சோதனை இரவு வரை நீடித்தது. தில்லியிலிருந்து வந்ததாகக் கூறப்படும் இந்தக் குழுவில் கொச்சி, பெங்களூரு, சென்னை, மதுரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த அதிகாரிகள் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
சோதனையின் போது, சங்கா் அங்கு இல்லை. அவரைத் தேடி சில அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றனா். ஆனால், அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால், அண்டை வீட்டாரிடம் அவா் குறித்து விசாரித்தனா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இதே நிறுவனத்தில் மதுரையைச் சோ்ந்த வருமான வரித் துறையினா் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

