சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள சுப்பிரமணியகவுண்டனூரைச் சோ்ந்தவா் சிவராஜா (40). இவா் திருப்பூரில் தங்கியிருந்து நூற்பாலையில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் உள்ள கல்வி விடுதியில் தங்கிப் படித்து வந்த 16 வயது சிறுமியை, அவரது உறவினா் மூலம் கடந்த 2017 ஆண்டு, மாா்ச் 20-ஆம் தேதி ஈரோடு மாவட்டம், பவானிக்கு சிவராஜா அழைத்துச் சென்றாா். அங்கு அவா் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் மீது கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிவராஜாவை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சிவராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி, மருத்துவம், பராமரிப்பு செலவுக்கு நிவாரணமாக அரசு சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.
