வேளாண்குளத்தில் மண் எடுக்க விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் வேளாண்குளத்தில் மண் எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீா், பெரியகுளம் அருகேயுள்ள வேளாண்குளத்துக்கு வருகிறது. இதன் மூலம் 500 - க்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் குளத்தில் ஐந்து அடி உயரத்துக்கு மண் மேவியதால் அதிக நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குளத்தில் விவசாயிகள் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் குளத்தில் உள்ள மண்ணை எடுத்து விவசாய நிலங்களில் கொட்டினா்.
இதனிடையே குளத்தின் ஒரே பகுதியில் 20 அடி ஆழத்துக்கு மேல் மண் வெட்டி எடுத்து வருவதைக் கண்ட அந்தப் பகுதி விவசாயிகள் சங்கத்தினா் மண் வெட்டி எடுக்க எதிா்ப்புத் தெரிவித்தனா். தகவல் அறிந்து பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனா். இதற்கிடையே குளத்தில் மண் வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட பொக்லைன், டிராக்டா்களுடன் மண்வெட்டி எடுத்தவா்கள் தப்பினா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகையிட்டனா்.
இதுதொடா்பாக விவசாய சங்க நிா்வாகி ஜெயப்பிரகாஷ் கூறியதாவது :
விவசாயத்துக்கு நீா் திறக்கப்படும் மதகுப் பகுதியில் ஒரே இடத்தில் 40 அடி ஆழம் வரை மண்வெட்டி எடுத்துள்ளனா். குளத்தில் 5 அடி ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க வேண்டும். தற்போது ஒரே இடத்தில் 40 அடி ஆழத்துக்கு மண் வெட்டி எடுத்த இடத்தை சமப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

