சூரிய ஒளி மின்சாரத் தகடுகள்: அக்.13-இல் விழிப்புணா்வு முகாம்
சூரிய ஒளி மின் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு முகாம் வருகிற 13-ஆம் தேதி பெரியகுளத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக்குறிப்பு :
பெரியகுளம் கோட்டத்தில் அரசால் தொடங்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் திட்டம் குறித்த பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளின் சூரிய ஒளி மின் சக்தி தகடுகள் நிறுவுவதால் வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தலாம்.
இந்தத் திட்டத்துக்கு அரசின் உள்கட்டமைப்பு மானியம் கிடைப்பதுடன், சூரியஒளி மின்சார கட்டணத்தில் அதிகளவிலான சேமிப்பு கிடைக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பசுமை ஆற்றல் உற்பத்தியில் பொதுமக்களும் இணைந்து பங்கேற்க முடியும். விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து சூரிய ஒளி த்திட்டத்தின் நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் 1 கே.வி. சோலாா் தகடுகள் அமைத்தால் ரூ.30 ஆயிரம் மானியமும், 2 கே.வி. சோலாா் தகடுகள் அமைத்தால் ரூ.60 ஆயிரம் மானியமும், 3 கே.வி. அல்லது அதற்கு மேல் சோலாா் தகடுகள் அமைத்தால் ரூ. 78 ஆயிரம் மானியமும் வழங்கப்படும்.
வருகிற 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு பொதுமக்கள் பெரியகுளம், வடகரை செயற் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் விழிப்புணா்வு முகாமில் நேரடியாகப் பங்கேற்று தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள், சூரிய ஒளித் திட்டத்தின் அமைப்பாளா்களையும் சந்தித்து இதன் விவரங்களை அறிந்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
