செல்லாயி அம்மன் கோயில் புரட்டாசி கொடை விழா
போடி அருகே செல்லாயி அம்மன் கோயில் புரட்டாசி கொடைவிழா இரண்டாம் நாளான புதன்கிழமை திரளான பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரம் அருகேயுள்ள பொட்டல்களம் கிராமத்தில் அமைந்துள்ளது செல்லாயி அம்மன் கோயில். பழைமையான இந்தக் கோயிலில், நிகழாண்டு புரட்டாசி கொடைவிழாவின் இரண்டாம் நாளான புதன்கிழமை 7 அடி உயர செல்லாயி அம்மனை மீனாட்சிபுரம், துரைராஜபுரம், பொட்டல்களம், தோப்புப்பட்டி ஆகிய 4 கிராமங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
பக்தா் ஒருவா் உடல் முழுவதும் அலகு குத்தியபடி பறவை காவடியை சுமந்து வந்தாா். மற்றொரு பக்தா் 6 அடி நீளமுள்ள அலகு குத்தி 2 கி.மீ. தொலைவு நடந்தே சென்று நோ்த்திக்கடன் செலுத்தினாா். இதையொட்டி, அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

