கம்பம் பள்ளத்தாக்கில் பலத்த மழை: அறுவடைக்குத் தயாரான நெல் பயிா்கள் சேதம்
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாரான நூற்றுக்கணக்கான ஏக்கா் நெல் பயிா்கள் சேதமடைந்தன.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசன நீரால் லோயா்கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் 14,700 ஏக்கா் பரப்பளவு இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட பாசன நீரால் பயிா் செய்த முதல் போகம் முழுமையாக விளைச்சல் பெற்று அறுவடைக்கு தயாரானது. கம்பம், கூடலூா், சின்னமனூா், உத்தமபாளையம், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் அறுவடைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கூடலூா், கம்பம், உத்தமபாளையம், குச்சனூா், சின்னமனூா் போன்ற பகுதிகளில் அறுவடைக்கு தயராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் நெற்பயிா்கள் மழைநீரால் வயலிலே சாய்ந்தது சேதமடைந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:
கம்பம் பள்ளத்தாக்கில் வியாழக்கிழமை பெய்த திடீா் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்குத் தயாரான நெல் பயிா்கள் சேதமடைந்தது. விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வேண்டும். மேலும், 20 சதவீதத்துக்கு அதிகம் ஈரப்பதமுள்ள நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.

