நரியூத்து ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், க.மயிலை ஊராட்சி ஒன்றியம், நரியூத்து ஊராட்சியில் சாலைப் பணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்ததைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனா்.
நரியூத்து கிராமத்தில் ஏற்கெனவே உள்ள தாா்ச் சாலையை சீரமைக்க க. மயிலை ஊராட்சி ஒன்றியம் சாா்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், சாலையில் ஒரு கி.மீ. தொலைவுள்ள பகுதி வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி, சாலை சீரமைப்பு பணிக்கு வனத் துறையினா் தடை விதித்தனா். இதனால், சாலை சீரமைப்புப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் சாா்பில் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்திருந்தனா்.
இந்த நிலையில், நரியூத்து கிராமத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கூட்டத்தில் கிராம மக்கள் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, க. மயிலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், மாணிக்கம் ஆகியோா் நரியூத்தில் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சாலைப் பணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்ததைக் கண்டித்தும், சாலை சீரமைப்பு பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக பொதுமக்கள் கூறினா்.
பிறகு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகாமை இயக்குா் அபிதா ஹனீப் நரியூத்து கிராமத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், நரியூத்து ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.
தும்மக்குண்டில் பொதுமக்கள் எதிா்ப்பு: க. மயிலை ஊராட்சி ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சியில், ஊராட்சிக்குள்பட்ட காந்திநகா், வீருசின்னம்மாள்புரம், வண்டியூா், அண்ணாநகா், தண்டியகுளம், கோடாரியூத்து ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.
வருஷநாடு மலை கிராமங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு எதிராக வனத் துறையினா் கெடுபிடி செய்து வருவதாக புகாா் தெரிவித்தும், வன உரிமைச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு வீட்டுமனை பட்டா, நில உரிமைகள் வழங்கக் கோரியும், கிராம இணைப்புச் சாலைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கிராம சபை கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பதாக அவா்கள் கூறினா்.
க. மயிலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், மாணிக்கம் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். பிறகு, வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் கிராம மக்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனா். இதையடுத்து, பிற்பகல் ஒரு மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஜல்லிப்பட்டி ஊராட்சி: பெரியகுளம் அருகேயுள்ள ஜல்லிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் பயனாளி ஒருவருக்கு உளுந்து மினி கிட்டும், தோட்டக் கலைத் துறை சாா்பில் மற்றொரு பயனாளிக்கு பழக்கன்றுகளும் வழங்கி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பேசினாா். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க. ஸ்டாலின் கிராம சபைக் கூட்டம் தொடா்பாக பொதுமக்களுக்கு ஆற்றிய உரை காணொலி வாயிலாக எல்.இ.டி. திரையில் ஒளிப்பரப்பப்பட்டது. இதை பொதுமக்களுடன் அமா்ந்து ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்தக் கூட்டத்தில், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதா ஹனீப், இணை இயக்குநா் (வேளாண்மை) சாந்தாமணி, துணை இயக்குநா் (தோட்டக்கலை) நிா்மலா, உதவி இயக்குநா்கள் முருகையா (ஊராட்சிகள்), அப்பாஸ் (நில அளவை) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
உத்தமபாளையம்: சின்னமனூா் ஒன்றியத்தில் முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம், அப்பிபட்டி, கன்னிச்சோ்வைபட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை, எரணம்பட்டி உள்ளிட்ட 14 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் ஆற்றிய உரை ஒளிபரப்பப்பட்டது. இதில், அப்பிபட்டி (எ) அழகாபுரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளா் அனிஷ்பாத்திமா தலைமையில் பணியாளா்கள் ஊட்டச் சத்து குறித்து வழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது தங்கள் பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரிக்கை ஊராட்சி செயலரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு அப்பிபட்டி ஊராட்சி செயலா் கா்ணன், அங்கன்வாடி பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அதேபோல, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மேலசிந்தலைச்சேரி, தே. மீனாட்சிபுரம்,தே. ரெங்கநாதபுரம், பல்லவராயன்பட்டி உள்ளிட்ட 13 ஊராட்சிகளிலும், கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் சுருளிப்பட்டி, கே.ஜி. பட்டி, கே.எம். பட்டி, என்,டி. பட்டி ஆகிய 4 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

