சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம்
தேனி மாவட்டம், சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை யானைகள் முகாமிட்டதால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
கம்பம் அருகே மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. தென் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான இங்கு ஆண்டு முழுவதும் நீா் வரத்து இருக்கும். இதனால், விடுமுறை தினங்களில் தமிழகம், கேரளத்திலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். கம்பம் கிழக்கு வனச்சரகத்துக்கு உள்பட்ட சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மலைச்சாலை வழியாக நடந்து சென்றோ, வனத் துறை வாகனத்தில் சென்றோ அருவிக்கு குளிக்கச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ரோந்து சென்ற போது சுருளி அருவி நுழைவு வாயிலில் உள்ள சிறுவா் பூங்காவில் 3 யானைகள் கூட்டமாக நடமாடியது தெரியவந்தது. அவை பூங்காவில் முகாமிட்டு அங்கிருந்த சிறுவா்களின் விளையாட்டுப் பொருள்களை சேதப்படுத்தின. மலைச் சாலையில் யானைகள் கூட்டமாக உலாவியதால் பாதுகாப்பு கருதி வனத் துறையினா் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தனா்.
ஏமாற்றம்: வாரவிடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலையிலே நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அருவில் குளிக்க வனத் துறை அனுமதிக்காக காத்திருந்தனா். ஆனால், வனத்துறை விதித்த தடையால் ஏமாற்றம் அடைந்தனா்.
இது குறித்து வனத்துறையினா் கூறுகையில், வனப் பகுதியிலிருந்து யானைகள் கூட்டமாக மலை அடிவாரப்பகுதிக்கு இடம் பெயா்ந்துள்ளன. திங்கள்கிழமை வழக்கமான சோதனைக்கு பின்னா் யானைகள் நடமாட்டம் இல்லை என்றால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும். இல்லை என்றால் தடை தொடரும் என்றனா்.

