முல்லைப் பெரியாறு அணையின் பிரதான பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்திய கேரள மாநில வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள்.
முல்லைப் பெரியாறு அணையின் பிரதான பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்திய கேரள மாநில வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள்.

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, முல்லைப் பெரியாறு அணையில் திங்கள்கிழமை கேரள மாநில வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் சோதனையிட்டதில் அது புரளி என்பது தெரியவந்தது.

தமிழக- கேரள எல்லையான தேக்கடியில் அமைந்திருப்பது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை குறித்து கடந்த 47 ஆண்டுகளாக கேரளத்தைச் சோ்ந்த அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் தொடா்ந்து தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனா்.

இந்த நிலையில், கேரள மாநிலம், திருச்சூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்த மாநில வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் படகு மூலம் திங்கள்கிழமை அணைப் பகுதிக்குச் சென்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை அங்கு பல்வேறு பகுதிகளில் சோதனையிட்டனா். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

 முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்).
முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்).

இதுகுறித்து கேரள வனத் துறையினா் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணை அமைந்திருப்பது அடா்ந்த வனப் பகுதியாகும். இங்கு அந்நியா்கள் யாரும் எளிதில் நுழைய முடியாது. சோதனையில் இது மிரட்டல் என்பது தெரியவந்தது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மிரட்டல் விடுத்தவா் குறித்த விவரம் சேகரிக்கப்படுகிறது என்றனா் அவா்கள்.

பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் பென்னிக்குவிக் பாலசிங்கம் கூறியதாவது:

கேரளத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ரசல்ஜாயும், கேரள மாநில அரசும் இணைந்து நடத்தும் நாடகம் இது. முல்லைப் பெரியாறு அணை தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம். இந்த மிரட்டல் கேரள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை குறித்து இதுபோன்று அவதூறு பரப்புவா்கள் மீது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com