சேமிப்புக் கிடங்கு முன் காத்திருப்பு போராட்டம்
பணியின் போது உயிரிழந்த சுமை தூக்கும் தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தேனியில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு முன் சிஐடியூ தொழில் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போாராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த தேனியைச் சோ்ந்த சக்திவேல் சில நாள்களுக்கு முன் பணியின் போது உயிரிழந்தாா். இவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி தலைமை வகித்தாா்.
இதில் சுமைப் பணி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் டி.வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேனி தாலுகா செயலா் இ.தா்மா், இந்திய ஜனநாயக இளைஞா் சங்க மாவட்டச் செயலா் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தேனி, அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். உயிரிழந்த சக்திவேல் குடும்பத்துக்கு சேமிப்புக் கிடங்கு ஒப்பந்த நிறுவனம் மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தையடுத்து காத்திருப்புப் போராட்டத்தை தொழிலாளா்கள் கைவிட்டனா்.

