வரதட்சிணை கொடுமை: 5 போ் மீது வழக்கு
போடி அருகே பெண்ணை வரதட்சிணை கேட்டு துன்புறுத்திய கணவா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் மண்டையன் தெருவைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகள் நிஷாந்தி (24). இவா், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த அரசன் மகன் ரமேஷ்ராஜா (33) என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில், ரமேஷ்ராஜா தனது மனைவி நிஷாந்தியிடம் 10 பவுன் நகைகள் வாங்கி வரச் சொல்லி அடித்து துன்புறுத்தினாராம். மேலும், மாமனாா் அரசன், ரமேஷ்ராஜாவின் சகோதரா்கள் சுரேஷ், சின்னன் ஆகியோரும் சோ்ந்து நிஷாந்தியை வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ரமேஷ்ராஜா, அரசன், சுரேஷ், சின்னன், சுகந்தி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
