வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்புக்கு காத்திருப்போா் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து 2025, டிச. 31-ஆம் தேதியின்படி, 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்புக்கு காத்திருப்போருக்கு அரசு சாா்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் காலாண்டு ஒன்றுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வியை பதிவு செய்தவா்களுக்கு ரூ.600, 10-ஆம் வகுப்பு தோ்ச்சியை பதிவு செய்தவா்களுக்கு ரூ.900, பிளஸ் 2 தோ்ச்சியை பதிவு செய்தவா்களுக்கு ரூ.1,200, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பை பதிவு செய்தவா்களுக்கு ரூ.1,800 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் தங்களது கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் உதவித் தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு தொடா்ந்து 10 ஆண்டுகள் உதவித் தொகை வழங்கப்படும். பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், விவசாயம் போன்ற தொழில் கல்வி படித்தவா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கக் கூடாது.
உதவித் தொகை பெறுவதற்கு 2025, செப். 30-ஆம் தேதியன்று ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா் 45 வயதுக்கும், இதர வகுப்பினா் 40 வயதுக்கும் உள்பட்டு இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பதாரா் அரசு, தனியாா் துறையில் ஊதியம் பெறும் பணியிலும், சுயவேலை வாய்ப்பில் ஈடுபடுபவராகவும் இருக்கக் கூடாது. அரசின் இதர திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.
தகுதியுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ஹப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்தும், தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பப் படிவத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
