கம்பத்தில் பலத்த மழை: 20 வீடுகள் சேதம் முல்லைப் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்
தேனி மாவட்டம், கம்பத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை பலத்த மழை பெய்தது. இதனால், 20 வீடுகள் சேதமடைந்தன. உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் மேகமலை, குமுளி, கம்பம்மெட்டு, தேவாரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.
இதனால், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் நீா்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தவிர, உத்தமபாளையத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
சுமாா் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, முல்லைப் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், உத்தமபாளையம் சூா்யநாராயணபுரம், களிமேட்டுப்பட்டி, உத்தியமலை, ஞானம்மன்கோவில் தெரு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனா். மேலும், மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டன.
20 வீடுகள் சேதம்:
இந்த மழை காரணமாக, கம்பம் மஞ்சக்குளம், கம்பம்மெட்டு குடியிருப்பு, அண்ணாநகா் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த வீடுகளை தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.
சாலை துண்டிப்பு: கம்பம்-சுருளிப்பட்டி இடையே சுருளி அருவிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் முல்லைப் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், இந்தச் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதி மக்கள் மாற்றுச் சாலையைப் பயன்படுத்திச் சென்றனா்.
இதேபோல, தேனி மாவட்டம், போடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மிதமான சாரல் மழை பெய்தது. சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கி விடிய விடிய மழை பெய்தது.
இதனால், போடி நகா் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. போடி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. போடி அணைப் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் வெள்ளம் ஆா்ப்பாரித்துச் சென்றது. கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்ததால், போடி பங்காருசாமி கண்மாய், செட்டிகுளம் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் விரைவாக நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதேபோல, போடி மலைப் பகுதிகளான குரங்கணி, கொட்டகுடி, பிச்சங்கரை, போடிமெட்டு, ஊத்தாம்பாறை ஆகிய மலைக் கிராமங்களிலும் பலத்த மழை பெய்ததால் நீரோடைகள், சிற்றாறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.
