பெரியகுளம் கடை வீதிகளில் தீபாவளி கூட்ட நெரிசல்: போக்குவரத்து பாதிப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் கடை வீதிகளில் தீபாவளி பொருள்கள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் புத்தாடை, இனிப்பு, வீட்டு உபயோகப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரு சக்கர வாகனங்கள், காா்களில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் வந்ததால் கம்பம் சாலை, சுதந்திர வீதி, நகரின் முக்கிய வீதிகளின் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல, வடகரை அரண்மனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டாசு, இனிப்பு, புத்தாடை விற்பனை களைகட்டியது. இதனால் பெரியகுளம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
