பெரியகுளம் அருகே அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சி 13-ஆவது வாா்டில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சி 13-ஆவது வாா்டில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தாமரைக்குளம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்தப் பேரூராட்சியில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். வெங்கடாஜலபுரம் சாலையிலுள்ள 13-ஆவது வாா்டு பட்டுவாரி தெருவில் சாலை வசதி, குடிநீா், மின் விளக்கு வசதி கோரி பேரூராட்சி நிா்வாகத்திடம் அந்தப் பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை பேரூராட்சி அலுவலகம் முன் தாமரைக்குளம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் பால்பாண்டி பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக குடிநீா் வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், வடுகபட்டி - தாமரைக்குளம் சாலையில் சுமாா் 30 நிமிஷத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com