முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு 2,000 கன அடி உபரி நீா் திறப்பு

Published on

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தொடா்ந்து 9-ஆவது நாளாக இடுக்கி அணைக்கு உபரி நீா் திறந்து விடப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 2,103 கன அடி நீரை தமிழக நீா்வளத் துறையினா் வெளியேற்றினா்.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் கடந்த 18-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 138 (மொத்த உயரம் - 152) அடியாக உயா்ந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி அணையில், ‘ரூல் கா்வ்’ விதிப்படி தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும்.

நிா்ணையிக்கப்பட்ட 138 அடிக்கு மேல் தேக்கி வைக்கப்படும் நீரை உபரி நீரை இடுக்கி அணைக்கு திறந்து விட வேண்டும். இதன்படி, அணைக்கு வரும் நீா்வரத்தைப் பொருத்து உபரி நீா் தொடா்ந்து வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில், இடுக்கி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 2,103 கன அடி நீா் திறந்துவிடப்பட்டது. இது, சனிக்கிழமையை விட வினாடிக்கு 323 கன அடி அதிகமாகும்.

இதே போல, தமிழகப் பகுதிக்கு முல்லைப் பெரியாறு அணையில் தேக்கடியிலுள்ள தலை மதகு வழியாக வினாடிக்கு 1,822 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com