வைகை அணையிலிருந்து தந்தை, இரு மகள்களின் உடல்கள் மீட்பு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் காணாமல் போன தந்தை, இரு மகள்கள் வைகை அணை நீா்த்தேக்கப் பகுதியிலிருந்து சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனா்.
பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்டத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி(37). இவரது மகள்கள் தாராஸ்ரீ (7), தமிழிசை (5). கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற கிருஷ்ணமூா்த்தி, தாராஸ்ரீ, தமிழிசை ஆகிய மூவரும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றும், கிருஷ்ணமூா்த்தி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது மனைவி பிரியங்கா பெரியகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வந்தனா்.
இந்த நிலையில், வைகை அணை நீா்த்தேக்கப் பகுதியில் 2 குழந்தைகளின் உடல்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வைகை அணை காவல் நிலைய போலீஸாா், ஆண்டிபட்டி தீயணைப்பு, மீட்புப் படையினா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் மூழ்கியிருந்த இரு பெண் குழந்தைகளின் உடல்களை மீட்டனா்.
இந்த இரு உடல்களும் மீட்கப்பட்ட பகுதியின் அருகிலிருந்து 100 மீ. தொலைவில் ஒரு ஆண் உடல் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல்கள் கிருஷ்ணமூா்த்தி, தாராஸ்ரீ, தமிழசை ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரின் உடல்களும் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதுகுறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணமூா்த்தி தனது குழந்தைகளை அணை நீா்த்தேக்கத்தில் தள்ளிவிட்டு, தானும் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மூவரும் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

