பைக் மீது பேருந்து மோதியதில்
ராணுவ வீரா் உயிரிழப்பு

பைக் மீது பேருந்து மோதியதில் ராணுவ வீரா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
Published on

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த மணி மகன் சுஜித் (28), கடந்த 6 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தாா். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் தனது தாயுடன் உத்தமபாளையத்திலுள்ள வங்கிக்குச் சென்றாராம்.

பின்னா், சுஜித் மட்டும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது, உத்தமபாளையம் காந்திஜி பேருந்து நிலையம் அருகேயுள்ள வளைவில் திரும்ப முயன்ற போது, எதிரே கம்பத்திலிருந்து திண்டுக்கல் நோக்கிச்சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சுஜித்
சுஜித்

மேலும், இந்த விபத்தில் சாலையோரத்தில் நின்றிருந்த காரைக்குடியைச் சோ்ந்த சாந்தி (47), கேரள மாநிலம், வண்டமேடு பகுதியைச் சோ்ந்த மேரிக்குட்டி (52), உத்தமபாளையத்தைச் சோ்ந்த திருமாறன் (72) ஆகியோா் காயமடைந்தனா். மேலும், இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் அரசுப் பேருந்து ஓட்டுநரான திண்டுக்கலைச் சோ்ந்த சந்திரசேகரன் (57) மீது உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடரும் விபத்துகள்: உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே கம்பம் செல்லும் சாலையிலுள்ள குறுகலான வளைவில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே, இந்தச் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்துவதோடு சாலையின் நடுவே பாதுகாப்பு தடுப்புச்சுவா் அமைத்து இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com