சுடச்சுட

    

    விருதுநகரில் நூற்றாண்டு விழா திட்ட பணிகள் தொடங்கப்படுமா?

    By விருதுநகர்  |   Published on : 01st June 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் நகராட்சியில் ஒப்பந்தம் விடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் நூற்றாண்டு விழா திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

     விருதுநகர் நகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசு சிறப்பு நிதியாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்தது. இதில் புதிய சாலைகள் அமைக்க ரூ 14.20 கோடி, மூன்று மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க ரூ.5 கோடி, நான்கு சுகாதார வளாகங்கள் கட்ட ரூ.60 லட்சம், தெரு விளக்குகளை எல்.இ.டியாக மாற்ற ரூ.50 லட்சம், நினைவுத்தூண் அமைக்க ரூ.70 லட்சம், வின்பிஆர் பூங்கா மேம்பாட்டிற்கு ரூ.1 கோடி, பழைய பேருந்து நிலையத்தில் கட்டடங்கள் மற்றும் காத்திருப்போர் அறை கட்ட ரூ. 1கோடி, நகராட்சியில் கட்டடங்கள் கட்ட ரூ.2 கோடி என ஆக மொத்தம் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    சில பணிகளுக்கு ஜனவரியிலும், மீதமுள்ள  பணிகளுக்கு கடந்த 2015 மார்ச் 11-ஆம் தேதியும் டென்டர் விடப்பட்டது. நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட சுமார் 5 சதம் வரை கூடுதல் மதிப்பீட்டில் ஒப்பந்தகாரர்கள் ஏலம் எடுத்தனர். 4 இடங்களில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க ஏலம் விடப்பட்டதில் ஒரு இடத்தில் கூட சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்படவில்லை. வி.என்.பி.ஆர் பூங்கா மேம்பாடு செய்யும் பணி, நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் டெண்டர் விடப்பட்டு ஓர் ஆண்டுகள் நிறைவடைந்தும், இன்று வரை தொடங்கப்படவில்லை.

     நகராட்சி விதிமுறைகளின்படி, காலதாமதம் ஏற்பட்டால் ஒப்பந்தகாரருக்கு அபராதம் விதிக்கவும், டெண்டரை ரத்து செய்யவும் நகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    எனவே, நூற்றாண்டு விழா பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai