மேம்பாலம், சத்துணவு கூடம் அமைக்க கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
By விருதுநகர் | Published on : 02nd June 2016 04:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விருதுநகர் அருகே கோட்ட நத்தம் கிராமத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும், சேதமடைந்த சத்துணவு கூடத்தை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பவது: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் கோட்டநத்தம் கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள கெளசிகா நதியின் குறுக்கே 1996 ஆம் ஆண்டு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது, அப்பாலம் உடைந்து விட்டதால், மழை காலங்களில் அவ்வழியே பள்ளி மாணவர்கள் உள்பட கிராம மக்கள் யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது.
அதனால், இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் தரைப்பால பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது.
எனவே, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். மேலும், கோட்ட நத்தத்தில் இடிந்த நிலையில் உள்ள சத்துணவு கூடத்தை அகற்றி, அங்கு புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.