சுடச்சுட

  

  சாத்தூர் புதிய அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி செய்து தர நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாத்தூர் பிரதான சாலை மற்றும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி என இரண்டு இடங்களில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பிரதான சாலையில் செயல்படும் அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் பிரிவு, பிரசவ வார்டு, எக்ஸ்ரே, ரத்த வங்கி, பிரேத பரிசோதனை பிரிவு மட்டும் செயல்பட்டு வருகின்றன. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள புதிய அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், சித்த மருத்துவப் பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. அனைத்து மருத்துவர்களும், இங்கு இருப்பதால் நோயாளிகள் அதிகமாக வருகின்றனர். அதே நேரத்தில் இங்கு எக்ஸ்ரே வசதி இல்லாததால், இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பழைய மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்ல வேண்டி உள்ளது என்றும், அங்கு நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

  இது ஒருபுறம் இருக்க, புதிய அரசு மருத்துவமனையில் உள்ள மின்விசிறி மற்றும் மின்விளக்குகள் செயல்படாமல் உள்ளன என்றும், இதனால் தாங்கள் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வெளியில் உறங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  சுகாதாரக் கேடு: இதற்கிடையே புதிய மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உபயோகிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் அருகிலேயே கொட்டப்படுகின்றன. மேலும் அவை அங்கேயே எரிக்கப்படுவதால் சுகாதாரக் கேடு அதிகரித்துள்ளது. அதே போல், மருத்துவமனையின் நுழைவு வாயிலில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் அங்கு சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெறுகின்றன. மேலும் மருத்துவமனையைச் சுற்றிலும் முள்செடிகள் உள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே இங்கு அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai