சுடச்சுட

  

  விருதுநகர் நகராட்சியில் பொது நிதி இல்லை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

  By விருதுநகர்  |   Published on : 06th June 2016 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் நகராட்சியில் நிதிப் பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

  விருதுநகர் நகராட்சியில் பொறியியல் பிரிவு, வருவாய்த்துறை, சுகாதார பிரிவு, நகரமைப்பு பிரிவு ஆகியவற்றில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். மேலும், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், நகரமைப்பு அலுவலர், வருவாய் அலுவலர் உள்பட அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.

  நகராட்சிக்கு தொழில்வரி, சொத்து வரி, கடை உரிமம், கடை வாடகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், குடிநீர் வரி ஆகியவற்றின் மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வசூலாகி வருகிறது. இந்த நிதி பொது நிதியாக நகராட்சியில் வரவு வைக்கப்படும். இதன் மூலம்,  நகராட்சியில் பணிபுரிவோருக்கு மாதந்தோறும் சுமார் ரூ.55 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மின் மோட்டார், தெரு விளக்கு, நகராட்சி பள்ளிகள், அலுவலகங்கள் ஆகியவற்றிற்கான மின் கட்டணம், குப்பை அள்ளும் வாகனம், பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் எந்திரங்கள், கொசு மருந்து அடித்தல், ஆணையாளர் வாகனம் ஆகியவற்றிற்கு எரிபொருள் செலவும் இதன் மூலமே செய்யப்படுகின்றன. பொதுவாக நகராட்சி பொது நிதியை, சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்தல், மின் மோட்டார் பழுது உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் சீரமைத்தல், புதிய கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகளில் பற்றாக்குறை வரும் போது, பொது நிதியை பயன்படுத்தி வந்தனர். இதனால், தற்போது நகராட்சி பொது நிதி மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மே மாதத்துக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: கடந்த ஆண்டு 92 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டது. மாதந்தோறும் நகராட்சிக்கு மாநில நிதிக்குழு மூலம் வரக்கூடிய நிதியானது, கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. மேலும், இந்த ஆண்டிற்கான வரி வசூல், இனிமேல் தான் தொடங்கும் நிலையில் உள்ளது. பொது நிதியில் பணம் இல்லாததால் மே மாதத்திற்கான சம்பளம் ஊழியர்களுக்கு இன்னும் வழங்கவில்லை என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai