ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு எழுத தன்னார்வலர்களை நியமிக்கக் கோரிக்கை
By விருதுநகர் | Published on : 08th June 2016 12:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருவோரிடம், சிலர் ரூ.30 வசூல் செய்து கொண்டு மனு எழுதி தருவதை தடுக்க தன்னார்வலர்களை மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்ய வேண்டும் என சமூக நலஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் அரசின் உதவி கேட்டும், தங்களது ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கோரியும் ஏராளமானோர் மனு அளிக்க வருவர். இதையடுத்து, அங்கு 30-க்கும் மேற்பட்டோர் மனு எழுதும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள், எழுதப் படிக்கத் தெரியாத முதியோர் மற்றும் பெண்களிடம் மனு எழுத ரூ.20 முதல் ரூ.30 வரை வசூலிக்கின்றனர். இவர்களில் சிலர், அவசர கதியில் முழு விவரங்களுடன் மனு எழுதாததால் அந்த மனுவை அதிகாரிகள் நிராகரித்து விடுவதாகக் கூறப்படுகிறது.
பல கி.மீ. பயணம் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு பதில் கிடைக்காததால் மனு கொடுத்தவர்கள் மீண்டும் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர். இதனால் தங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதுடன், அலைக்கழிக்கப்படுவதாகவும் அவர்கள் மன வேதனை அடைகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு எழுதித் தர தன்னார்வலர்களை நியமிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.