சுடச்சுட

  

  கழிப்பறை கட்டியவர்களுக்கு மானியம் நிலுவை: பயனாளிகள் அதிருப்தி

  By விருதுநகர்  |   Published on : 10th June 2016 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் நகராட்சிப் பகுதியில், 80 க்கும் மேற்பட்ட  தனிநபர் இல்லக் கழிப்பறைகளுக்கான மானியம் இதுவரை வழங்கப்படவில்லை.

  திறந்த வெளி பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், நகராட்சி பகுதியில் தனிநபர் கழிப்பறை கட்ட மத்திய அரசு நிதி ரூ.4 ஆயிரம், மாநில அரசு நிதி ரூ.2 ஆயிரம், நகராட்சி நிர்வாகம் ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.8 ஆயிரம் மானியமாக வழங்க வேண்டும்.

  இந்நிலையில், விருதுநகர் நகராட்சியில் 2015-16 ஆம் ஆண்டில் 976 தனி நபர் கழிப்பறையும், 2016-17-இல் 1463 கழிப்பறையும் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பயனாளிகளிடம் இருந்து அவசரம், அவசரமாக மனுக்கள் பெறப்பட்டன. கழிப்பறை கட்டும் பணியை தொடங்க வேலைக்கான உத்தரவுகளும் விரைவாக வழங்கப்பட்டன. அதன் காரணமாக, சுமார் 80 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கடன் பெற்று கழிப்பறைகளை கட்டி முடித்தனர்.

  கட்டி முடித்ததற்கான புகைப்படங்களையும் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் நான்கு மாதங்கள் ஆன நிலையில், இதுவரை ஒருவருக்கு கூட மானியத் தொகை ரூ.8 ஆயிரம் வழங்கப்படவில்லை. நகராட்சி அலுவலர்களிடம் கேட்டால் விரைவில் உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்கின்றனராம்.

  இதுகுறித்து நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், மத்திய அரசு வழங்கிய நிதி மட்டுமே நகராட்சி வசம் உள்ளது. மாநில அரசு நிதி இதுவரை வரவில்லை.

  மேலும், விருதுநகர் நகராட்சி பொதுநிதியில் பணம் இல்லை. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட சிக்கல் உள்ளது. அதன் காரணமாக தான் இலவச கழிப்பறை கட்டியவர்களுக்கு மானிய தொகை வழங்கவில்லை என்றார். இதனால், பயனாளிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai