சுடச்சுட

  

  பிரசவத்தின்போது சிறுநீர் பையில் காயம்: இரு மருத்துவர்கள் ரூ.65 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 10th June 2016 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரசவத்தின்போது, பெண்ணின் சிறுநீர்ப் பையில் காயம் ஏற்படுத்திய அரசு மருத்துவர் உள்ளிட்ட இரு மருத்துவர்கள் ரூ.65, 314 இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

  சாத்தூர் தாலுகா, பெரியகொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ரம்ஜான் பேகம். கர்ப்பிணியான இவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ராணி மணிவண்ணனிடம் ஆலோசனை பெற்று வந்துள்ளார். 4.9.2004-இல் ரம்ஜான் பேகத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டது.

  அவரை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர் ராணி மணிவண்ணன், தனக்குச் சொந்தமான சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி கூறியுள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    பிரசவத்தின் போது மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால், ரம்ஜான் பேகத்தின் சிறுநீர்ப் பையில் கீறல் ஏற்பட்டு, சிறுநீர் தானாக வெளியேறியது.

      இதை சரி செய்வதற்காக மதுரை ஷெனாய் நகர், கக்கன் தெருவில் மருத்துவமனை வைத்துள்ள டாக்டர் ஏ.எம்.சையது இப்ராஹிம் என்ற சிறப்பு மருத்துவரை அழைத்து வந்து அறுவை சிகிச்சை செய்து தையல் போட்டுள்ளார். அதன்பின்னும் சிறுநீர் தானாகவே வெளியேறியுள்ளது. 10 நாள்களில் இது சரியாகி விடும் என்று கூறியுள்ளனர். அதன் பின்னரும் சிறுநீர் தானாகவே வெளியேறியுள்ளது. இதையடுத்து, மதுரையில் டாக்டர் ஏ.எம்.சையது இப்ராஹிமின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு ராணி மணிவண்ணன் கூறியுள்ளார். அதன்படி அந்த மருத்துவமனையில் ரம்ஜான் பேகம் மூன்று நாள்கள் தங்கிய பின், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துக் கடிதம் கொடுத்துள்ளனர்.

       சிகிச்சை பெற்ற ஒவ்வொரு மருத்துவமனையிலும் கட்டணம் செலுத்திய வகையில் ரூ.10 ஆயிரம் வரை ரம்ஜான் பேகத்திடம் வசூலித்துள்ளனர். 

   பின்னர் தனியார் மருத்துவமனையில் ரம்ஜான் பேகம் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து சிகிச்சை முடித்து பூரண குணம் அடைந்து 23.12.2004-ல் வீடு திரும்பியுள்ளார்.

  இதனையடுத்து ரம்ஜான் பேகம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தனக்கு இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார்.  மனு நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.

  அவர்கள் அளித்த தீர்ப்பு: டாக்டர்கள் ராணி மணிவண்ணன், ஏ.எம்.சையது இப்ராஹிம் ஆகியோரின் சேவையில் குறைபாடு உள்ளது. மதுரை தனியார் மருத்துவமனையில் ரம்ஜான் பேகம் செலவழித்த தொகை, மதுரைக்கான போக்குவரத்துச் செலவு, சிரமம், மனவேதனை, செளகரியக் குறைவு ஆகியவற்றிற்கு சேர்த்து ரூ.60,314 மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரத்தை மனு தாக்கல் செய்த நாளிலிருந்து தொகை வசூலாகும் தேதி வரை 6 சதவீத வட்டியுடன் டாக்டர்கள் ராணி மணிவண்ணன், ஏ.எம்.சையது இப்ராஹிம் ஆகியோர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai