சுடச்சுட

    

    பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறல்

    By விருதுநகர்,  |   Published on : 11th June 2016 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன. பாலிதீன் பைகள் தயார் செய்வதை தடை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் பாலிதீன் பைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது எனவும், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலிதீன் பைகளை விற்பது குற்றம் எனவும் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து சிலமாதங்களுக்கு முன்பு விருதுநகர் நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகள் 30 முதல் 40 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டன.

    ஆனால், அதன்பின் சோதனை தொடரவில்லை. பாலிதீன் பைகள் விற்பனை தடையின்றித் தொடர்கிறது. இதன் விளைவாக நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் குப்பைகள் மலை போல் தேங்கி விடுகின்றன. பொது மக்கள், பாலிதீன் பைகளில் உணவு பொருள்களை போட்டுக் கட்டி, குப்பையில் வீசி விடுகின்றனர். அந்த உணவை உண்ணும் ஆடு, மாடுகள், பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து விழுங்கி பாதிக்கப்படுகின்றன.

    மேலும் வாறுகால்கள் முழுவதும் பாலிதீன் பைகள் அடைத்துக் கிடக்கின்றன. கழிவு நீர் சாலைகளில் பெருக்கெடுத்து செல்கிறது.

    நகராட்சி குப்பைக் கிடங்குகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. அதில் சிலர் தீ வைத்து விடுவதால், குப்பைக் கிடங்குகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த நச்சுப் புகை பரவுகிறது.

    இதுகுறித்து, சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறும்போது, 40 மைக்ரானுக்குக் குறைவான பாலிதீன் பைகள் தயாரிப்பை உடனடியாக தடை செய்வதே இப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்றார்.

    எனவே, விருதுநகர் மாவட்டத்தில், 40 மைக்ரான் அளவுக்கு குறைவாக விற்கப்படும் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai