சுடச்சுட

  

  சவுடு மண் அள்ள அனுமதி தராததால் செங்கல் உற்பத்தி விலை அதிகரிப்பு

  By விருதுநகர்  |   Published on : 12th June 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் பட்டா நிலங்களில் சவுடு மண் அள்ள அனுமதி தராததால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், தம்பிபட்டி, மம்சாபுரம், கோபாலபுரம், கோட்டையூர், மீனாட்சிபுரம், வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன. இத்தொழிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பல கட்டுமான பணிகளுக்கு இங்கிருந்து தான் செங்கற்கள் கொண்டு செல்லபடுகின்றன.

  செங்கல் தயாரிப்பதற்கு சவுடு மண், கரம்பை மண் ஆகியவை முக்கியமானவை. கடந்த எட்டு மாதங்களாக விருதுநகர் மாவட்ட பட்டா நிலங்களில் மண் எடுப்பதற்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

  இதனால், செங்கல் உற்பத்தியாளர்கள், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, எம்.கல்லுப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து 4 யூனிட் சவுடு மண் ரூ.5 ஆயிரம், மதுரை மாவட்டம், வாடிபட்டியில் இருந்து ரூ. 8 ஆயிரம் என விலை கொடுத்து வாங்கி வந்து செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 1 யூனிட் சவுடு மண், கரம்பை மண்ணில் ஆயிரம் செங்கற்கள் மட்டுமே தயாரிக்க முடியும். இதனால் ஒரு செங்கலின் அடக்க விலை ரூ.3.30 ஆகிறது. ஆனால், கட்டுமான நிறுவனங்கள், ரூ.3 க்கே கேட்கின்றனர்.

  இதனால், உற்பத்தி செய்யப்பட்ட செங்கலை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  இப்பகுதியில் இருந்து ஒரு நாளைக்கு 20 லாரி லோடு வரை சென்ற செங்கல்கள், தற்போது, 4 லோடுகளாக குறைந்துவிட்டன.

  இதனால், பல காளவாசல்களில் செங்கல் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் பணிபுரிந்த தொழிலாளர்களும் தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் 100 நாள் வேலைத் திட்ட பணிகளுக்கு சென்று விட்டனர். தம்பிபட்டி குலாலர் சங்க நிர்வாகிகள் கூறியது : மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பட்டா நிலங்களில் மண் அள்ளுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. அதனால், இப்பகுதியில் செங்கல் உற்பத்தி பெரும் பாதிப்படைந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், பட்டா நிலங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

  புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 10 கி.மீ சுற்றளவுக்கு பட்டா நிலங்களில் மண் அள்ள, வனத்துறையினரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று வர வேண்டும் என உத்தரவு உள்ளது. தற்போது, வனத்துறை மண் அள்ள அனுமதி வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இதற்குத் தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, விரைவில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai