சுடச்சுட

  

  கூமாபட்டி பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல் விவசாயிகள் பாதிப்பு

  By விருதுநகர்  |   Published on : 13th June 2016 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல் விற்கவேண்டியுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

   விருதுநகர் மாவட்டம் வானம் பார்த்த பூமி என்பதால் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளே அதிகம் உள்ளது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள வத்திராயிருப்பு, கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர் பகுதியில் மட்டும் நெல், தென்னை, மா விவசாயம் செய்யப்படுகிறது. கண்மாய் மற்றும் மோட்டார் பாசனம் மூலம் கூமாபட்டி, எஸ். கொடிக்குளம், ராமசாமியாபுரம், நெடுங்குளம், கான்சாபுரம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் டீலக்ஸ், எல்எல்ஆர், ஜேஜேஎல் ரக கோடை நெல் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன.

  கடந்த சில தினங்களாக இந்த நெல் ரகங்கள் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லை. எனவே வியாபாரிகள் முகாமிட்டு மிகக் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கிச் செல்கின்றனர். மேலும் நெல்லுக்கான பணத்தையும் உடனடியாகக் கொடுப்பதில்லை.

  இது குறித்து ராமசாமியாபுரத்தை சேர்ந்த விவசாயி கருப்பையா கூறியது: ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய உழவு, களை எடுப்பு, உரம், மருந்து அடித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் என ரூ. 17 ஆயிரம் வரை செலவு ஆகிறது. தற்போது கோடை நெல் ஒரு ஏக்கரில் 20 மூடை தான் விளைந்துள்ளது. 72 கிலோ எடை கொண்ட ஒரு நெல் மூடை ரூ. 1,400க்கு விற்க வேண்டும்.  ஆனால் வியாபாரிகள் அதிகபட்சமாக ரூ. 1,100 க்கு தான் வியாபாரிகள் வாங்குகின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணத்தையும் உடனடியாக வழங்குவதில்லை. பல்வேறு தவணைகளில் சிறிது சிறிதாக பிரித்து வழங்குகின்றனர். எனவே, கூமாபட்டி பகுதியில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.  

  மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் கூறுகையில், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக கூமாபட்டி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai