சுடச்சுட

    

    தேங்காய் மட்டை வரத்து அதிகரிப்பால் மெத்தைக்கு பயன்படும் நார் விலை குறைவு

    By விருதுநகர்  |   Published on : 14th June 2016 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் மட்டை வரத்து அதிகரிப்பால், மெத்தை, பேருந்து இருக்கைக்கு பயன்படும் நார் விலை குறைந்துள்ளது. எனவே, பொள்ளாச்சி பகுதியில் நார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை போல் இப்பகுதியிலும் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கான்சாபுரம், கூமாபட்டி, பிளவக்கல், சுந்தரபாண்டியம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் பகுதிகளில் சுமார் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் தேங்காய்கள் மட்டைகள் நீக்கப்பட்டு காங்கேயம் பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    தேங்காய் மட்டைகளை விற்பனை செய்வதற்காக வத்திராயிருப்பு, மகாராஜபுரம் பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட பேட்டைகள் உள்ளன. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக தேங்காய் விளைச்சல் இப்பகுதியல் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு ரூ. 3,000 த்திற்கு விற்கப்பட்ட தேங்காய்மட்டை (ஒரு டிராக்டர் லோடு) தற்போது ரூ.1,100 க்கு விற்கப்படுகிறது.

    தம்பிபட்டி பகுதியில் தேங்காய் மட்டையிலிருந்து நார் பிரிக்கும் தொழிலில் ஏழு தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன. அதில் இயந்திரங்கள் மூலம் நாரை பிரித்து காய வைத்து அவற்றை கட்டுகளாக்கி விற்கின்றனர். கருப்பு, வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் நார்கட்டுகள் தரம் பிரிக்கப்படுகின்றன.

    இந்த நார்கட்டுகள் மெத்தை, பேருந்து இருக்கைகள், தரைவிரிப்புகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. 35 கிலோ எடை கொண்ட வெள்ளை நார்கட்டு தற்போது ரூ.380 க்கும், ரூ.500 க்கு விற்கப்பட்ட கருப்பு நார்கட்டு ரூ. 260 க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய்மட்டை அதிக வரத்து காரணமாக நார் விலை குறைந்து விட்டதால் நஷ்டம் ஏற்படுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    நார் உற்பத்தியாளர் பாதுஷா கூறுகையில்: இங்கு உற்பத்தி செய்யப்படும் நார்களைத் தரம் வாரியாக பிரித்து கேரளாவுக்கு அனுப்புகிறோம். பொள்ளாச்சி பகுதியில் இத்தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு 35 சதவீதத்தை அரசு மானியமாக  வழங்குகிறது. இங்கு வழங்கப்படுவதில்லை. இந்த ஆண்டு நார் தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மானியம் வழங்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai