சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் தடுக்கப்படுமா?

  By விருதுநகர்  |   Published on : 16th June 2016 12:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Diwali_Cracker

  விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி முன்பதிவுகளை விரைந்து முடிக்க பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் நடைபெறுவதாகவும், அதைத் தடுக்க அதிகாரிகள் குழுவை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

  மேலும், கருந்திரி தயாரிக்க சில ஆலைகளுக்கு அனுமதி வழங்காததால், அது பல கிராமங்களில் குடிசை தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல், வீடுகளில் கருந்திரி தயாரித்தல், கூடுதல் தொழிலாளர்கள் பணி புரிதல், ஒப்பந்தத்தின் அடிப்படையில் பட்டாசு அறைகளை வாடகைக்கு விடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

  தற்போது தீபாவளிக்கான பட்டாசு முன்பதிவை விரைந்து முடிக்கும் பணியை பல ஆலை நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. இதில் அனுபவமில்லாத தொழிலாளர்களை கொண்டு பட்டாசு தயாரிக்கும் போது விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில், பேன்சி ரக வெடிகள், ராக்கெட், அணுகுண்டு, இரட்டை வெடி, கருந்திரி தயாரிக்க அனுமதி இல்லை. ஆனாலும், சில ஆலைகளில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கின்றனர். இதனாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. அதே போல் பட்டாசு தயாரிக்கும் அறைகளில் தண்ணீர் மற்றும் மணல் நிரப்பப்பட்ட வாளிகள், ரப்பர் சீட் போன்றவை இருக்க வேண்டும். ஆனால், சில ஆலைகளில் இவை இருப்பதில்லை. இதனால் கடந்த ஜனவரி முதல் மே வரை 11 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்.

   இதுகுறித்து பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி (சிஐடியு) கூறியதாவது:

  பட்டாசு தொழிலாளர்களுக்கு, பட்டாசு தயாரிக்க பயன்படும் வேதிப் பொருள்களின் தன்மை குறித்தும், விபத்து நடைபெறும் முன்பே தொழிலாளர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதம் குறித்தும் தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், அப்பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெறவில்லை. இதனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர்.

  பட்டாசுக்கான மணி மருந்து கலவைகளை காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தயாரிக்க வேண்டும். மிதமான தட்ப வெப்ப நிலையில் மணி மருந்து கலவை தயாரித்தால் விபத்து ஏற்படாது. ஆனால், பல ஆலை நிர்வாகத்தினர் தேவைக்கேற்ப கால நேரமின்றி மணி மருந்து கலவையை தயாரிக்கின்றனர், இதனாலே விபத்து ஏற்படுகிறது. பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு ரப்பர் கையுறைகள், பருத்தி ஆடைகள், பஞ்சு, முகக் கவசம், ரப்பர் தரை விரிப்புகள் தருவதில்லை. மேலும், பட்டாசு ஆலைகளுக்கிடையே ஏற்படும் தொழில் போட்டி காரணமாக வேதிப் பொருள்களுடன் ஈதர் சேர்க்கப்படுகிறது.

  இதனால் தொழிலாளர்களுக்கு தோல் நோய்கள், கர்ப்பப்பை கோளாறு, காசநோய் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. மேலும், தீபாவளியையொட்டி விதிமுறை மீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம், அதிகாரிகள் குழுவை அமைத்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வுக்  குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai