Enable Javscript for better performance
குற்றாலம் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? :சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    குற்றாலம் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? :சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

    By ராஜபாளையம்  |   Published on : 19th June 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குற்றாலம் சீசன் களை கட்டியிருக்கும் நிலையில், மதுரை- தென்காசி- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன் மாதம் முதல் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். குற்றால சீசன் ஆகஸ்டு மாதம் வரை தொடர்ந்து நீடிக்கும். இந்த மாதங்களில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் குற்றாலத்திற்கு ஆர்வத்துடன் வருகின்றனர்.

    மதுரையில் இருந்து திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக செங்கோட்டை செல்லும் பேருந்தில் பயணம் செய்தால், 5 மணி நேரம் ஆகிறது. மேலும் இச்சாலையானது மிகவும் குறுகிய, ஆபத்து மிகுந்த அபாய வளைவுகள் அதிகம் கொண்டதாக உள்ளதால் பேருந்தில் பயண நேரம் அதிகமாகிறது.

    அதேநேரத்தில் மதுரையில் இருந்து சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வரை செல்லும் பயணிகள் ரயிலில் சென்றால் 3 மணி நேரமே ஆகிறது. தினந்தோறும் இருமார்க்கங்களிலும் 3 முறை மட்டும் பயணிகள் ரெயில் செல்கிறது. மேலும் செங்கோட்டை- சென்னை இடையிலான பொதிகை எக்ஸ்பிரஸ் ஒரு முறையும் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் கட்டணத்தை விட பேருந்து கட்டணம் பல மடங்கு அதிகம் என்பதால் ஏழை எளிய, நடுத்தர குடும்பத்தினர் குற்றாலம் செல்ல ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

    சாதாரண நாள்களிலே கூட மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில்களில் அதிக அளவில் கூட்டம் நிரம்பி வழியும். தற்போது குற்றால சீசனை அனுபவிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரயில் மூலம் பயணிகள் அதிக அளவில் வருவதால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

    நடவடிக்கை இல்லை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து வாரத்தில் இரு நாள்கள் மானாமதுரை வந்துகொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை ரயில்வே நிர்வாகம் நீட்டித்தது. பின்பு அந்த ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. போதிய ரயில் வசதி இல்லாததால் குற்றால சீசனுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பொதுமக்கள் மற்றும் பயணிகள் ஒவ்வொரு வருடமும், குற்றாலத்திற்கு செல்ல வசதியாக செங்கோட்டை வரை செல்ல சிறப்பு ரயில்கள் இயக்க கோரி ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வரை டெமோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலை இரவு நேரத்தில் ராஜபாளையம்,தென்காசி வழியாக திருநெல்வேலி வரை இயக்கினால் சுற்றுலாப் பயணிகள் பயன் பெறுவர். மேலும் ஏற்கனவே இயங்கி வந்த கோவை-செங்கோட்டை பயணிகள் ரயிலையும், மானாமதுரை வரை வந்து செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலையும் மீண்டும் செங்கோட்டை வரை இயக்க வேண்டும். அதேபோல் சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யலாம். குற்றால சீசன் முடியும் வரையிலாவது மதுரை- செங்கோட்டை வரை கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வெண்டும் என பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தெற்கு ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு உடனடியாக வலியுறுத்தி கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai