சுடச்சுட

    

    விருதுநகர் நகராட்சியில் தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

    By விருதுநகர்  |   Published on : 20th June 2016 06:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் நகராட்சியில் முக்கியச் சாலைகள் மற்றும் தெருக்களில் பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 75 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிருஷ்ணமாச்சாரி சாலை, அருப்புக்கோட்டை சாலை, ராமமூர்த்தி சாலை, பாத்திமாநகர் பிரதான சாலை, ரயில்வே பீடர் சாலை, காமராஜர் புறவழிச்சாலை, பாவாலி சாலை ஆகியவை முக்கியச் சாலைகளாகும். மேலும், மேலரதவீதி, தெற்கு ரதவீதி, மெயின் பஜார், காசுக்கடை பஜார், உள்தெரு, தந்திமரத்தெரு, பர்மா காலனி, அஹமது நகர், இந்திரா நகர், வேலுச்சாமி நகர், லட்சுமி காலனி ஆகியவை முக்கிய வீதிகளாகும். இச்சாலைகள் மற்றும் தெருக்களில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டியூப் லைட் மற்றும் சோடியம் விளக்குகள் உள்ளன. இவற்றை நகராட்சி ஊழியர்கள் பராமரித்து வந்தனர். நகராட்சி மொத்த வருவாயில் 49 சதவீதத்திற்கு மேல் செலவுகள் செய்வதால் புதிய பணி நியமனம் செய்யக் கூடாது என்பது அரசு விதிமுறையாகும். அதன் காரணமாக தெரு விளக்குகள் பராமரிப்புப் பணியை நகராட்சி தனியாரிடம் ஒப்படைத்தது. கடந்த சில மாதங்களாக ஒப்பந்தகாரருக்கு நிதி வழங்கவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாக தனியார் நிறுவனம் பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

    இதனால், நகரின் முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் பல தெரு விளக்குகள் எரியவில்லை. வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்கள் போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம், பழுதடைந்த விளக்குகளை உடனடியாக மாற்றி புதிய விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai