சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்
By சாத்தூர் | Published on : 21st June 2016 08:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சாத்தூர் அருள்மிகு வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோத்ஸவத் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சாத்தூர் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலின் ஆனித் பிரம்மோத்ஸவத் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் அன்னவாகனம், சிம்மவாகனம், கருடவாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. தேரடித்தெரு, பள்ளிவாசல் தெரு, பிரதான சாலை, வடக்குரத வீதி வழியாக வந்து மீண்டும் தேர் நிலையை அடைந்தது.
சாத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவை முன்னிட்டு பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.